திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்

திருப்பம் தரும் திருப்பதி வேங்கடவன்
Tirupati-perumal


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
                      Click Here : Register for Free Training
      சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 RUPEEDESK - SHARE MARKET TRAINING 
Whatsapp Number : 91-9094047040 / 91-9841986753
B Com /BBA/ MCom COACHING CLASS - 9944811555
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது. இந்த வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கிருஷ்ண அவதாரத்தில், பகவான் தன்னுடைய திருக்கரங்களால் கோவர்த்தன மலையைத் தாங்கினார். தன்னை ஏந்திய கிருஷ்ணனை, தான் தாங்க வேண்டும் என விரும்பியதாம் கோவர்த்தன மலை. அதன்படி இந்த கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையானை திருவேங்கட மலையாய் இருந்து தாங்கி நிற்பதாக புராணங்கள் சொல்கின்றன. வேங்கடாத்ரி, சேஷாத்ரி, வேதாத்ரி, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி எனும் ஏழு சிகரங்களுடன் வேங்கடமுடையானைத் தாங்கி நிற்கிறது, வேங்கட மலை.

ஒருமுறை பூமாதேவியைப் பாயாகச் சுருட்டி பாதாளத்தில் அடைத்து வைத்தான் இரண்யாட்சன் என்னும் அசுரன். திருமால் பூமாதேவியைக் காக்கும் பொருட்டு வராகமாக அவதரித்தார். பின்பு இரண்யாட்சனுடன் போரிட்டு அவனைக் கொன்று பூமாதேவியை மீட்டார். பூமித்தாயை தன் மடியில் தாங்கி வராக மூர்த்தியாய் தேவர்களுக்கு காட்சிக்கொடுத்தார்.

அப்போது பிரம்மதேவன் திருமாலை வேண்டி, ‘வராக மூர்த்தியாகியத் தாங்கள், கலியுக மக்களைக் காக்கும்பொருட்டு திருவேங்கடத்தின் சேஷாத்ரி சிகரத்தில் எழுந்தருளவேண்டும்' என்றார்.

அதன்படி வராகமூர்த்தி திருமலை எனும் திருவேங்கடத்தில் எழுந்தருளினார். திருவேங்கடம் என்பதற்கு இருவகை பொருளுண்டு. ஒன்று தன்னை அண்டியவர்களுடைய பாவங்களை எரித்துவிடுதல் (வேம்- பாவங்கள், கடம்-எரித்தல்), மற்றொன்று தன்னை அண்டியவர்களுக்கு அழிவில்லாத ஐஸ்வரியங்களைத் தருதல் (வேம்-அழிவில்லாதது, கடம்- ஐஸ்வர்யம்). சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இத்தலத்தை திருவேங்கடம் என்றே குறிக்கின்றன. திருமலையை மேல்திருப்பதி என்றும் அழைக்கிறார்கள். திருமகளை திருமார்பில் தரித்த திருமால் உறையும் பதி என்பதால், இதற்கு ‘திருப்பதி’ என்ற பெயர் வந்தது.

பிருகு முனிவரால் ஒரு முறை மகாவிஷ்ணுவை பிரிந்தாள் மகாலட்சுமி. வைகுண்டத்தில் இருந்து பூலோகம் வந்து கோல்காப்பூரில் தங்கியிருந்தாள். (கோல்காப்பூரில் இன்றும் மகாலட்சுமிக்கு தனி ஆலயம் உள்ளது). மகாலட்சுமியைத் தேடி மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்து திருமலையில் (திருப்பதி) ஒரு புற்றில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது ராமாவதாரத்தில் வாக்கு கொடுத்தபடி, வேதவதி என்றப் பெண்ணை (கலியுகத்தில் பத்மாவதி) மகாவிஷ்ணு மணந்து கொண்டார். திருமணச்செலவுக்கு மகாவிஷ்ணுவிடம் பணம் இல்லை. மகாலட்சுமி தான் பெருமாளிடம் தற்போது இல்லையே?. இதனால் திருமணச்செலவுக்கு குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்கக் காசுகளை கடனாகப் பெற்றார் திருமால். அந்த தங்கக்காசுகளை கலியுக முடிவில் தந்து விடுவதாகவும், அதுவரை வட்டியைக் கொடுத்துவிடுவதாகவும் கூறினாராம்.

இந்த நிலையில் மகாவிஷ்ணு, பத்மாவதியை மணந்து கொண்டதை நாரத மகரிஷி மூலம் அறிந்து கொண்ட மகா லட்சுமி, கோல்காப்பூரில் இருந்து திருமலைக்கு வந்தார். அப்போது மகாவிஷ்ணு மகாலட்சுமியை வாஞ்சையுடன் அணைத்து, தமது திருமார்பில் இருத்திக் கொண்டார். திருச்சானூர் என்ற இடத்தில் அலர்மேலுமங்கை என்னும் பத்மாவதி தாயாரை அமர்த்தினார்.

திருமலையில் வெங்கடாசலபதியின் கோவிலுக்கு அருகிலேயே ‘சுவாமி புஷ்கரணி’ என்னும் தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளத்தின் மேற்குக்கரையின் வடமேற்கு மூலையில் வராகமூர்த்தி ஆலயம் இருக்கிறது. இந்த வராக மூர்த்தியே திருமலையின் ஆதிமூர்த்தி ஆவார். எனவே திருமலையில் வெங்கடாசலபதியை தரிசிக்கும் முன்பு ஆதிவராக மூர்த்தியை தரிசிப்பதே முறையான வழிபாடு ஆகும்.

பின்னர் ‘மகா துவாரம்' எனும் நுழைவு வாசல் வழியாக உள் நுழைந்தால், தங்கத்தால் வேயப்பட்ட ‘ஆனந்த நிலையம்' விமானத்தை தரிசிக்கலாம். அதன் விமானத்தின் கீழ்தான், நின்ற கோலத்தில் மூலவர் வெங்கடாசலபதி அருள்பாலிக்கிறார். விமானத்தின் வடகிழக்கு மூலையில் வெள்ளியால் வேயப்பட்ட திருவாசியோடு, விமான வெங்கடேசர் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டு வலம் வந்தால் ஆனந்த வாழ்வு அமையும் என்கிறார்கள்.

கருவறையில் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் வேங்கடவன் அருள்கிறார். கருவறை வெளிச்சுற்றில் வரதராஜர், ராமானுஜர், யோக நரசிம்மர் சன்னிதிகளும், பிரார்த்தனை உண்டியலும் உள்ளன.

புரட்டாசி சனிக்கிழமை திருவோண நாளில்தான், திரு மலைக்கு வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு எழுந்தருளினாராம். எனவே இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளும், புரட்டாசி திருவோண விழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப் படுகிறது. நாரத முனிவரின் வழிகாட்டலின்படி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, வேங்கடவனை வழிபட்டு பெரும் செல்வமும், வைகுண்டபதவியும் பெற்றான் பீமன்.

இவன் மகாபாரத பீமன் அல்ல. உடல் ஊனமுற்ற குயவன். மண் பானை செய்யும் அவன், புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வேங்கடவனின் அருள்பெற்றதால், இன்றும் திருமலை வேங்கடவனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண்பாண்டங்களிலேயே தயாரிக்கிறார்கள். தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமைகளில் இங்கு வேங்கடவனுக்கு வில்வார்ச்சனை செய்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று இங்கு நடைபெறும் ‘ஷேத்ர பாலிகா’ உற்சவத்தின்போது, பெரு மாளுக்கு வைரத்தில் திருநீற்று நெற்றிப் பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது.

திருச்சானூரில் அலர் எனும் தாமரை மேல் அமர்ந்த திருக்கோலத்தில் பத்மாவதி தாயார் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். திருச்சானூரில் தனிச்சன்னிதியில் ஸ்ரீகிருஷ்ணரும், சீனிவாசப்பெருமாளும் எழுந்தருளியிருப்பது தனிச்சிறப்பாகும்.

ஆலயச் சிறப்பு

பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.