திருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு

திருவண்ணாமலையில் தீ மிதி விழா வரலாறு
tiruvannamalai-arunachaleswarar


           தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-

அண்ணாமலையார் அக்னியில் இருந்து தோன்றியவர். தீ பிழம்பாக இருந்து பிறகு சிவனடியார்களின் நலனுக்காக மலையாக மாறியவர். இந்த தத்துவத்தை அடிப்படையாக கொண்டு திருவண்ணாமலையில் எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. அதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூரம் உற்சவமும் ஒன்று.

மற்ற சிவாலயங்களில், சக்தி தலங்களில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு அலங்காரங்கள் செய்து மட்டுமே வழிபடுவார்கள்.

ஆனால் திருவண்ணாமலையில் வீதிஉலா, தீர்த்தவாரி, வளைகாப்பு அலங்காரம் ஆகியவற்றோடு அன்று இரவு தீ மிதிக்கும் விழாவும் நடைபெறும். தமிழ்நாட்டில் வேறு எந்த பழமையான சிவாலயத்திலும் தீ மிதி விழா நடத்தப்படுவதில்லை. ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் தீ மிதி விழா நடைபெறுகிறது. இது திருவண்ணாமலை தலத்துக்கே உரிய தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

ஆடி மாதத்தில் இந்த உற்சவத்தை 10 நாட்கள் கோலாகலமாக நடத்துவார்கள். இந்த ஆண்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) இந்த உற்சவம் தொடங்குகிறது. 10 நாட்களும் காலையிலும், மாலையிலும் அஸ்திரதேவர் (சூலம்) எடுத்துச் செல்லப்பட்டு பராசக்தி வடிவில் மாடவீதி உலா நடைபெறும். 10-வது நாள் அதாவது வருகிற 13-ந்தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் தினத்தன்று காலை முதல் நள்ளிரவு வரை திருவண்ணா மலை ஆலயமே கோலாகலமாக இருக்கும்.

அன்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணிக்குள் உச்சிகாலத்தில் கோவிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் அம்பாளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை தீமிதித்தல் விழா நடைபெறும். உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு மிகப்பெரிய நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு இந்த விழா நடைபெறும். உண்ணாமுலை அம்மன் பராசக்தியாக வந்து தீ குண்டத்தில் எழுந்தருள்வாள்.

இறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல இந்த தீ மிதி விழா நடைபெறும். இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வரலாறு வருமாறு:-

ஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார். இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன. எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது. ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது. உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.

அதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார். பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார். அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார். காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார். உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.

இதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார். அப்போது பார்வதியிடம் அவர், “உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்” என்றார். அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும். அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும். இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்” என்று கூறினார். உடனே சிவபெருமான் காஞ்சீ புரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும். அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.

அதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார். அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார். அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார். இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார். அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணா மலைக்கு சென்று அடைந்தார். முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார். பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார். அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர். அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள். பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

பார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். 8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர். அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார். அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர். அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது. விரைவில் இன்னொரு அத்தியாயத்தில் இதுபற்றி விரிவாக காணலாம்)

பார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது. அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார். (இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.

பார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார். பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார். அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார். பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார். அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார். அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார். இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர். அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.

இரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள். ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை. ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம். ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.

சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை. ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.

இதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார். ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.

சிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம். இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும். பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.

நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள். பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும். அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள். அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார். அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது. இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, “தீ-விரத-சத்திநிபாதம்” என்று சொல்வார்கள்.

உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7-8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள். அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.

உண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.